தமிழக வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுதினம் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகம்
வட கிழக்கு பருவமழை எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கொட்டித்தீர்த்துள்ளது. கால நிலை மாற்றத்தால் பரவலாக மழை பெய்யாமல் ஒரே பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு 95 செ.மீட்டர் மழை பதிவானது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. பல இடங்களில் மக்கள் கஷ்டப்பட்டு கட்டிய வீடுகள் வெள்ளத்தால் ஒரு சில மணித்துளிகளில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மக்களை பாதிப்பில் இருந்து மீட்கும் வகையில் தமிழக அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியது. கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகளில் மூலம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு உதவியோடு ஹெலிகாப்டர் மூலம் மீட்பு மற்றும் நிவராணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நிவராண நிதி கோரிய தமிழக அரசு
இதனையடுத்து வட மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரியது. ஆனால் மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மத்திய குழுவும் தமிழகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த குழு மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்க இருப்பதாக தெரிகிறது. இதனிடையே தென் மாவட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது. தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை. தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது என தெரிவித்தார்.
தூத்துக்குடி செல்லும் நிர்மலா சீதாராமன்
இந்தநிலையில் தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுதினம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவி வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்
தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது; ரூ.4000 கோடி எங்கே? நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!