மழை வெள்ளத்தால் முழுவதும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டு, சேத விவரங்களை மத்திய அரசிடம் அளிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிகிறது.
தூத்துக்குடியை புரட்டி போட்ட வெள்ளம்
வட கிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,தென் தமிழகத்தை கடந்த வாரம் மழையானது புரட்டி போட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்தது. பல வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. கால்நடைகளும் உயிரிழந்தது. இதனையடுத்து மீட்பு பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியது.
பல இடங்களில் மீட்பு பணி செய்ய முடியாத இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டும், நிவாரண உதவியும் வழங்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திற்கு 21ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு சார்பாக குறைவான தொகையே வழங்கியது.
வெள்ள பாதிப்பு என்ன.?
இதனிடையே மத்திய குழு கடந்த 20 ஆம் தேதியே நேரடியாக களத்தில் ஆய்வு செய்தது. இந்த குழுவானது வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வர இருப்பதாகவும்,அவர் சேத மதிப்பீடு தொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை கொடுப்பார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக நேற்று தமிழகம் வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மதியம் 2:30 மணிக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வார் எனவும் அதற்கு முன்னதாகவே மதியம் 12:30 மணியளவில் வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
நேரில் ஆய்வு செய்யும் நிர்மலா சீதாராமன்
இதனை தொடர்ந்து வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்ட தூத்துக்குடி டவுன், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் முத்தையாபுரம் போன்ற பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் மற்றும் வீடுகள் விளைநிலங்கள் என அனைத்தையும் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க இருப்பதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி.? முக்கிய முடிவு எடுக்க இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு