Tamil Nadu Rain Update : தமிழகத்தில் நிலவவுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 8 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் முடிந்ததோடு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறலாம். மழை முடிந்த பிறகு இன்றளவும் பெரிய அளவில் மழை எந்த மாவட்டத்திலும் செய்யவில்லை. ஆனால் கடும் பணியும், குளிரும் தமிழகம் முழுவதும் பரவலாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலும், தமிழகத்தில் மற்றும் சென்னையில் சில பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு திசையை நோக்கி வருகின்ற காற்று சந்திக்கும் போது உருவாகும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், பெரம்பலூர், சேலம், திருச்சி, சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் எதிர்வரும் 5 நாட்களுக்கு மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடியுடன் கூடிய மிதமானது முதல் அதி கனத்த மழை வரை வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடுகிறது. அதேபோல டிசம்பர் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும் தமிழகத்தின் சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது.