மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு மத்தியில் தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடப்பாண்டில் மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 5 முறை வந்து பிரசாரத்தில் ஈடுப்பட்ட நிலையில், 6ஆவது முறையாக மீண்டும் வரவுள்ளார். அதேபோல், பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் அமித் ஷா சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
மதுரை அதிமுக வேட்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - சு.வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை!
தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய இடங்களில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் செய்யவிருந்தார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென தனது தமிழக பயணத்தை அமித்ஷா ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.