
தேசிய கல்வி கொள்கை
தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இரு மொழி கொள்கை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் எனவும் மும்மொழி கொள்கையை ஏற்க வாய்ப்பே இல்லையென திட்டவட்டமாக கூறிவிட்டது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வரவேண்டிய 2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்களுக்கு மாத ஊதியம், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படாத நிலை உள்ளது. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
அதில் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குக் கொள்கைகளின் காரணமாக,கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது எனவும், எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது என தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்கவும் கேட்டு கொண்டிருந்தார்.
இந்த நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020க்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்பது இந்தக் கொள்கை வழங்கும் மகத்தான வாய்ப்புகள் மற்றும் வளங்களை தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பறிக்கிறது. இந்த கொள்கையானது நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக உடன் பாமக கூட்டணி அமைக்கிறதா? கழற்றி விடப்படுகிறதா பாஜக? ராமதாஸ் போடும் கணக்கு என்ன.?
புதிய தேசிய கல்விக் கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பதா.?
மாநிலங்கள் தங்களின் தனிப்பட்ட கல்வித் தேவைகளுக்கு ஏற்ப அதன் செயலாக்கத்தைத் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது. மேலும் சமக்ரா ஷிக்ஷா போன்ற மத்திய-ஆதரவு திட்டங்கள் NEP 2020 உடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் PM SHRI பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் முன்மாதிரி பள்ளிகளாக கருதப்படுகின்றன. ஒரு மாநிலம் புதிய தேசிய கல்விக் கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பதும் அரசியல் கதைகளைத் தக்கவைக்க அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துவதும் மிகவும் பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அரசு உலகளவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை ஊக்குவிக்கவும் பிரபலப்படுத்தவும் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக கூறியுள்ளார். எந்த மொழியையும் திணிப்பதை தேசிய கல்வி கொள்கை பரிந்துரைக்கவில்லை. பல பாஜக அல்லாத மாநிலங்கள் அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும் NEP இன் முற்போக்கான கொள்கைகளை செயல்படுத்தியுள்ளன.
கல்வியை அரசியலாக்க வேண்டாம்
கல்விக் கொள்கை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதே தவிர அவற்றைக் குறுகச் செய்வதை அல்ல. நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்றும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமது இளம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தை முழுமையாகப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்