மாமா உங்களை மறக்க மாட்டேன்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நெகிழ்ச்சி!

Published : Aug 28, 2023, 11:46 PM IST
மாமா உங்களை மறக்க மாட்டேன்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நெகிழ்ச்சி!

சுருக்கம்

மதுரை ரயில் விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாரஜன் நெகிழ்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுமார் 63 பேர் கொண்ட குழுவானது கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி புறப்பட்டு ஆன்மீக சுற்றுலாவுக்கு தமிழகம் வந்தனர். அவர்கள் வந்த ரயில் பெட்டிகள் மதுரை ரயில்வே சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 6 ஆண்கள், 3 பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கு ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டர் பயன்படுத்தியதுதான் காரணம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மேலும், மீட்பு பணிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை உள்ளிட்டவற்றை தங்கு தடையின்றி மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், மதுரை ரயில் விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாரஜன் நெகிழ்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “மாமா, உங்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன்! - தீ விபத்துக்கு உள்ளாகிய சுற்றுலா வந்திருந்த குழுவின் இளம் சிறுவன்

எரிந்துகொண்டிருந்த நெருப்பிலிருந்து இறைவன் எங்களைக் காப்பாற்றினார். அதற்குப் பிறகு நீங்கள் அனைவரும் எங்களை மிக நன்றாக கவனித்துக்கொண்டீர்கள். உங்கள் மீது நாங்கள் அதீத நன்றி உணர்வுடன் உள்ளோம். எங்கள் மாநிலத்திற்கும் உங்களைப் போன்ற எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறோம். - உயிர் பிழைத்த முதியவர் ஒருவர்.

துயரங்கள் நிகழும்போது, மனிதாபிமானம் மிக்க தமிழினத்தின்  தனிப்பட்ட பண்பானது, பாதிக்கப்பட்டவர்களை தங்கள் நெருங்கிய குடும்ப உறவாக நினைத்து உதவுவதே. 

துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுவதை இயற்கையாகவே கொண்டுள்ள ஒரு சமூகத்தின் வழித்தோன்றல் என்ற முறையிலும், பல தசாப்த தொழில்முறை அனுபவம் கொண்ட ஒரு முன்னாள் நிர்வாகி என்ற முறையிலும், இந்த துயர விபத்து ஏற்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், உறவுகளை உருவாக்கி அதை பேணிப்பாதுக்காக்க எப்பொழுதும் கரம் நீட்டும் ஒருவராக, ஆன்மீக சுற்றுலா பொருட்டு,  64 பயணிகளும் சில சுற்றுலா ஏற்பாடு நிர்வாகிகளும் பயணம் செய்த பெட்டி தீ விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவிட என்னால் முடிந்ததை நான் செய்தேன் என்பதை எண்ணி மனதில் ஒருவித நிறைவு அடைகிறேன்.

விபத்து நடந்தபொழுது நான் சென்னையில் இருந்தேன். நான் மதுரை விரைந்த அதே விமானத்தில், விபத்தின் நிவாரண பணிகளுக்காக தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் திரு ஆர் என் சிங் அவர்களும் பயணிக்க நேர்ந்தது. நாள் முழுவதும் அவருடனும் அவரது குழுவினருடனும் (DRM குழு & மதுரை குழு உட்பட) பயணம் செய்து, அவர்களுடன் இணைத்து பணியாற்றி முதல்வர் ஸ்டாலினால் உத்தரவிடப்பட்ட நடவடிக்கைகளையும் IRCTC இன் வழக்கமான நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து, உயிர் பிழைத்தவர்களுக்கு எங்களால் இயன்றதைச் செய்ததுடன், இறந்தவர்களின் கண்ணியத்தைப் பாதுகாத்து, அவர்களது உடல்களை அவர்களின் வீடுகளுக்கு விரைவாக அனுப்பிவைத்தோம்.

 

 

மிகக் குறுகிய நேரத்தில், பிரேதப் பரிசோதனைகள் மற்றும் விசாரணைகளை முடித்து, இறந்தவர்களின் சடலங்களை ஒப்படைத்து உதவிய அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மற்றும் மதுரை காவல் ஆணையர் இருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறந்தவர்களின் உடல்களைச் சென்னையிலிருந்து லக்னோவிற்கு விரைவாக அனுப்பிவைத்ததற்கும், லக்னோவிலிருந்து அவர்களின் உடல்களை அவர்களின் வீட்டிற்கு  பத்திரமாக அனுப்பி வைத்திட லக்னோவின் Sr Comdt CISF ASG’ஐ உதவுமாறு கேட்டுக் கொண்டதற்காகவும் சென்னையின் DIG CISF அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாள் முழுவதும்  மறுநாள் பயணிகள் அனைவரும் புறப்படும் வரை, CHO முதல் மருத்துவ உதவிகள் மட்டுமின்றி, தேவைப்படும் இடங்களில், மொழிபெயர்க்கக்கூடிய தெற்கு ரயில்வே ஊழியர்களைப் பயன்படுத்தி உளவியல் ஆலோசனைகளையும் வழங்கிய மருத்துவக் குழு வரை மதுரை மாநகராட்சியின் பல்வேறு அதிகாரிகளை வழிநடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை, அடிப்படை உதவி, நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற உதவிகளை வழங்கிய மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்திற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

வீடு திரும்புவதற்கு முன்பு —அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் IRCTC ஏற்பாடு செய்த விமானம் மூலம்— மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்ல விருப்பம் தெரிவித்த பயணிகளை அங்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தோம். ஏனெனில் அதுதான் அவர்கள் மதுரைக்கு சுற்றுலா வந்ததன் முதல் காரணம்.

புது டெல்லி செல்வதற்காகக் காத்திருந்த 20 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகளின் கடைசி குழுவை விமான நிலையத்தில் சந்தித்தேன். அவர்கள் அங்கிருந்து தங்களது சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய இடமான லக்னோவுக்கு செல்கிறார்கள். அவர்களை வழியனுப்பும் போது அவர்கள் கூறிய மேலே குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள்,  இரக்கமும் பரிவும், மனிதநேயம் மற்றும் பொதுச் சேவையின் சாராம்சம் என்பதை சரியான நேரத்தில் எனக்கு நினைவூட்டியது. அவை மொழி, பிராந்தியம் & கலாச்சாரம் ஆகிய அனைத்து எல்லைகளையும் கடந்தது.

அதிமுக மாதிரி நாங்க பயப்பட மாட்டோம்: உதயநிதி ஸ்டாலின்!

ஒவ்வொரு துயர நிகழ்வும் ஒரு சோதனைக் காலம். நம் அனைவரையும் ஒன்றாக இணைப்பதும் அதுவே. ஒவ்வொரு நிகழ்வையும் பிரச்சாரத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் சிலரைப் போல் அல்லாமல், நமது ஆயிரம் ஆண்டு பழமையான தமிழ்ப் பண்பாடு எப்போதும் மனிதாபிமான, சிந்தனைக்குரிய செயல்களை நோக்கி நம்மை வழி நடத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க, முழுமையான விசாரணையும் அதன் விளைவாக, தொடர்  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும். ரயில்வே துறை இதைக் கவனத்தில்கொள்ளும் என்று நம்புகிறேன்.” இவ்வாறு அமைச்சர் பிடிஆர் பதிவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்