
ஆடு, கோழி திருட்டு : தமிழகத்தில் கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது விவசாயமாகும், அடுத்ததாக ஆடு, கோழி வளர்ப்பாகும், இந்த நிலையில் மர்ம நபர்கள் பல்வேறு இடங்களில் இரவோடு இரவாக ஆடுகளையும், கோழியையும் திருடி செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர். திருடப்பட்ட ஆடுகளை வெளியூர்களில் பல ஆயிரங்களுக்கு விற்பனை செய்யும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அழகமாநகரி கிராமத்தில்ஆடு, கோழி அடிக்கடி திருடு போயுள்ளது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு அந்த ஊருக்கு வந்த கல்லம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், விக்னேஷ் ஆகிய இருவரை கிராம மக்கள் பிடித்துள்ளனர்.
ஆடு மற்றும் கோழியை திருடி செல்ல வந்ததாக கூறி அந்த இரண்டு பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மணிகண்டன் மற்றும் விக்னேஷ் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த மதகுபட்டி காவல் நிலைய போலீசார் இறந்த நபர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும் SS கோட்டை அருகே உள்ள கல்லம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் விக்னேஷ் (எ) சிவசங்கரன் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திலே ஆய்வு செய்தார். தொடர்ந்து ஏராளமான போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டு அந்த இரண்டு நபர்களை தாக்கியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு, கோழி திருட வந்த இருவரை கிராம மக்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.