தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டுவந்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது; ஆட்சியர் அதிரடி...

First Published Jul 11, 2018, 8:42 AM IST
Highlights
Two arrested in thug detention act for stealing and robbery


நாமக்கல்

நாமக்கல் பகுதியில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ளது கொன்னையாறு. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (52). கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி குமாரமங்கலம் பிரிவு சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பன்னீர்செல்வத்தை கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.1000 மற்றும் செல்போனை அபகரித்து தப்பிசென்றுவிட்டனர். 

பன்னீர்செல்வம் இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் காவலாளர்களின் விசாரணையில் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள எட்டிகுட்டையானூரைச் சேர்ந்த முருகேசன் (32), சங்ககிரி அருகே உள்ள கன்னந்தேரி மேட்டுகாட்டானூரைச் சேர்ந்த துரை (29) ஆகியோர்தான் பன்னீர்செல்வத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பின்னர் சேலம் சிறையில் அடைத்தனர்.

இவர்கள் இருவரும் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. எனவே, இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆட்சியரிடம் பரிந்துரைத்தார். 

அந்த பரிந்துரையை ஏற்ற ஆட்சியர் ஆசியா மரியம், முருகேசன் மற்றும் துரையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவு நகலை சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் திருச்செங்கோடு ரூரல் காவலாளர்கள் ஒப்படைத்தனர்.  

click me!