
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக பல்வேறு வியூகங்கை வகுத்து வருகிறார். மேடைக்க மேடைக்கு விஜய் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், விஜய் தனித்து போட்டியிட போகிறாரா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிட போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.
விஜய்யின் 51வது பிறந்தநாள்
இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யின் 51வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தவெக கட்சி தொண்டர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு விதமான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்நிலையில் அவருடைய பிறந்தநாளுக்கு பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வாரிசு அரசியலை எதிர்த்து கில்லியாக வெற்றி கண்டவர்
இதுதொடர்பாக முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
சீமான்
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான, சகோதரர் தவெக விஜய் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அன்புமணி
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் தம்பி விஜய் 51-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.