10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா: தேதி அறிவித்த தவெக தலைவர் விஜய்!

By Manikanda Prabu  |  First Published Jun 10, 2024, 10:19 AM IST

10, 12ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்


நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தான் ஒரே இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, அதற்கான பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடங்கியுள்ளனர்.

அதேசமயம், கட்சி தொடங்குவதற்கு முன்பு கடந்த ஆண்டு, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து நடிகர் விஜய் பாராட்டு விழா நடத்தினார். அவர்களுக்கு சான்றிதழும், தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும் வழங்கினார்.

Tap to resize

Latest Videos

அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டிலும் அந்த பணியினை செய்ய தனது கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தியிருந்தார். கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக 10, 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 10, 12ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, முதற்கட்டமாக வருகிற 28ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஜூலை 3ஆம் தேதியும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பிரதமராக பொறுப்பேற்றார் மோடி.. இளம் அமைச்சர் முதல் வயதான அமைச்சர் வரை.. முழு பட்டியல் இதோ..!

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் “தளபதி விஜய்” அவர்கள், 2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த "10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்" வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் “தமிழக வெற்றிக் கழகம்” சார்பாகப் பாராட்ட உள்ளார்.

முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று, சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!