
அண்மையில் திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வாரி வீசினார். விஜய், விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சைத் துண்டு அணிந்து பேசினார். திருவாரூர் மாவட்டம் "கருவாடாக காய்கிறது" என்று விமர்சித்து, டெல்டா பகுதி விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமைகளைச் சுட்டிக்காட்டினார். "திருவாரூர் என்றாலே தியாகராஜர் கோயிலும், ஆழித் தேரும் நினைவுக்கு வரும். ஆனால் இன்று சாலை வசதிகள் கூட சரியாக இல்லை".
சிறப்பாக ஓடவேண்டிய தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் ஓட விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர். முதல்வர் பிறந்த இந்த மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. பிரச்சாரத்தை முடக்கும் நோக்கில் 25 நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இதை பிரதமர் மோடி அல்லது அமித் ஷாவுக்கு விதிப்பார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
திருவாரூர் மாவட்டம் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த சொந்த மாவட்டம் என்பதால் திமுக தொடர்பான விஜய்யின் பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. மேலும் விஜய் பிரசாரம் செய்த மறு தினமே அதே இடத்தில் திமுக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, டிஆர்பி ராஜா, எம்பி டிஆர் பாலு, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் லட்சகணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திமுக.வை கடுமையாக விமர்சித்த விஜய்க்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணனின் ஆதரவாளர்கள் காட்டமாக பதில் அளித்து வருகின்றனர். குறிப்பாக எங்கள் அன்னண் கலைவாணன் இருக்கும் வரை திருவாரூரில் எந்த அணிலும் வாலாட்ட முடியாது என்ற தொணியில் இணையத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்துள்ள தவெக நிர்வாகிகள் பூண்டி கலைவாணன் மீதான குற்றச்சாட்டுகளை பொது வெளியில் பகிர்ந்து தங்கள் தரப்பு வாதத்தை பதிவிட்டு வருகின்றனர்.