
மத்திய பாஜக அரசு பிரமாண்டமான கட்டமைப்பை உருவாக்கி கொடுத்ததால் தான் தூத்துக்குடியில் தொழிற்சாலைகளை, திட்டங்களை செயல்படுத்த முதலீடுகள் செய்ய பெரு நிறுவனங்கள் முன் வருகின்றன என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மறந்து போனதும், மறைத்து பேசுவதும் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
நாராயணன் திருப்பதி
இதுதொடர்பாக தமிழக பாஜகவின் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: 'தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில்,55 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெரும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன' என்றும், 'தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும்' என்றும், 'கப்பல் கட்டும் சர்வதேச வரைபடத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகளையும் வளர்ச்சியையும் உருவாக்குகிறது திராவிட மாடல்' என்றும் தமிழக முதலமைச்சர் தன்னுடைய 'X' பதிவில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் இப்படிப்பட்ட முதலீடும், வளர்ச்சியும் வரவேற்கத்தக்கது என்கிற அதே வேளையில், இந்த முதலீட்டை செய்யும் நிறுவனங்கள் குறித்து விளக்கமாக அந்த பதிவில் முதல்வர் அவர்கள் குறிப்பிடாதது வியப்பளிக்கிறது.
பாஜக அரசு
கொச்சின் ஷிப் யார்ட் லிமிடெட் (CSL) எனும் இந்நிறுவனம், மத்திய அரசின் கப்பல், துறைமுகம் மற்றும் நீர்நிலை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனம். கப்பல் கட்டுமானம், கப்பல் சீரமைப்பு, கடல்சார் பொறியியல் பயிற்சி என பல்வேறு நடவடிக்கைகளை கொண்டுள்ளது இந்த நிறுவனம். 2014- 2015 ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூபாய். 69 கோடியாக இருந்த நிலையில், 2024-25 ம் ஆண்டின் நிகர லாபம் ரூபாய். 843 கோடியாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின்னர், 'இந்தியாவிலேயே தயாரிப்போம்', 'சுயசார்பு பாரதம்', 'சாகர் மாலா திட்டம்' போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் இந்த நிறுவனத்தை மேம்படுத்தியதோடு, சர்வேதேச அளவிற்கு உயர்த்தியது பாஜக அரசு. மேலும், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன கப்பல்களை சர்வதேச தரத்தில் தயாரிக்கும் வல்லமை கொண்டதாக இந்த நிறுவனம் விளங்கும் வகையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது பாஜக அரசு.
மஸாகன் கப்பல் கட்டும் நிறுவனம்
அதே போன்று, மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் மும்பையிலிருந்து செயல்படும் மற்றொரு நவரத்னா பொதுத் துறை நிறுவனம் தான் 'மஸாகன் கப்பல் கட்டும் நிறுவனம்'. கடந்த 2014ல் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூபாய் 461 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2025 நிதியாண்டில் நிகர லாபமாக ரூபாய்.2414 கோடியை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 7 ஆண்டுகளில் 23,562 கோடி மதிப்புள்ள 6 நீர்மூழ்கி கப்பல்களை இந்த நிறுவனம் இந்தியாவிற்கு தயாரித்துள்ளதோடு, பல நவீன போர்கப்பல்களையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் பொறுப்புக்கு அழகல்ல
இந்த இரு நிறுவனங்கள் தான் ரூபாய் 30,000 கோடி முதலீடு செய்வதோடு, 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க இருப்பதை தான் திராவிட மாடல் சாதனை என்று மார்தட்டி கொள்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தூத்துக்குடி துறைமுகத்தை பல்லாயிரம் கோடிகள் செலவில் விரிவாக்கம் செய்து, தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, தேசிய நெடுஞ்சாலையை தூத்துக்குடி வரை சிறப்பாக அமைத்து கொடுத்த பெருமை நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களையே சாரும். மத்திய பாஜக அரசு பிரமாண்டமான கட்டமைப்பை உருவாக்கி கொடுத்ததால் தான் தூத்துக்குடியில் தொழிற்சாலைகளை, திட்டங்களை செயல்படுத்த முதலீடுகள் செய்ய பெரு நிறுவனங்கள் முன் வருகின்றன என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மறந்து போனதும், மறைத்து பேசுவதும் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.
மலிவான அரசியல்
தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சி பெருகுவது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை தான், மகிழ்ச்சி தான் எனும் போதிலும், அந்த வளர்ச்சியை உருவாக்கிக் கொடுத்த மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும் நன்றி சொல்லாமல், பாராட்ட மனமில்லாமல், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், இது திராவிட மாடல் உருவாக்கிக் கொடுத்தது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது மலிவான அரசியலே. இது 'திராவிட மாடல்' அல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, இது "தேசிய மாடல்' என தெரிவித்துள்ளார்.