சுனாமி வாரிச்சுருட்டிய 14 ஆவது ஆண்டு நினைவு தினம் !! இன்று கண்ணீர் அஞ்சலி…

By Selvanayagam PFirst Published Dec 26, 2018, 8:48 AM IST
Highlights

தமிழகத்தை சுனாமி தாக்கி 14 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும், நாகை மாவட்ட மக்கள் இன்றளவும் மனதளவில் அதன் அச்சத்திலிருந்து விலகாதவர்களாகவே உள்ளனர்.

கடந்த 2004, டிசம்பர்  26-ஆம் தேதி இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, பூமிக்கு கீழேயுள்ள நிலத்தட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட ஆழிப்பேரலையால், தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

அன்றைய, டிசம்பர் 26-ஆம் தேதி நாகை மாவட்ட மக்களுக்கு வழக்கமான நாளாக அமையவில்லை. தாலாட்டுடன் கரையைத் தொட்டுச் சென்ற வங்கக் கடலின் அலைகள் அன்று திடீரென தனது ஆக்ரோஷத்தைக் காட்டின. பல மீட்டர் அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் மக்கள் சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கானவர்களை வாரி சுருட்டிக் கொண்டு கடலுக்குள் சென்றது.

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிய மக்கள் அடுத்த நாளில் இதுபோன்ற துயரச் சம்பவம் நிகழப்போகிறது என நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.

இதற்கு முன்னர் எந்தவொரு இயற்கை சீற்றமும் ஏற்படுத்திடாத பேரழிவை ஏற்படுத்தியது சுனாமி. பல்லாயிரக்கணக்கான கடலோர மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது. இதனால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த கோர நிகழ்வுக்குப் பின்னர், அரசாங்கமும், பல்வேறு சர்வதேச அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையான நிவாரண உதவிகளை வழங்கி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர், உடன் பிறந்தவர்களை இழந்த சகோதர, சகோதரிகள் என பலருக்கும் மனதளவில் சுனாமி ஏற்படுத்திய வடு இன்றளவும் மறையவில்லை.

இந்நிலையில் இன்று  14 ஆண்டுகளைக் கடந்துவிட்ட அதன் நினைவு தினத்தை முன்னிட்டு, நாகை, வேளாங்கண்ணி, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட இம்மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, சுனாமியால் உயிரிழந்தோர் நினைவாக பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

click me!