தமிழகத்தின் பாரம்பரிய உணவு தானிய பாதுகாப்பு முறை மீண்டும் நடைமுறைக்கு வரும் என்கிறார் திருச்சி சிவா...

 
Published : Jan 25, 2018, 10:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
தமிழகத்தின் பாரம்பரிய உணவு தானிய பாதுகாப்பு முறை மீண்டும் நடைமுறைக்கு வரும் என்கிறார் திருச்சி சிவா...

சுருக்கம்

Trichy Siva says that the traditional food grains system in Tamil Nadu will come back to life.

தருமபுரி

தமிழகத்தின் பாரம்பரிய உணவு தானிய பாதுகாப்பு முறை மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று தருமபுரியில் இந்திய உணவுக்கழகத்தின் மாநில ஆலோசனைக்குழு தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான திருச்சி சிவா தெரிவித்தார்.

இந்திய உணவுக்கழகத்தின் மாநில ஆலோசனைக்குழு தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான திருச்சி சிவா தலைமையிலான 17 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் தருமபுரி நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்குக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

அப்போது, உணவு தானிய பராமரிப்பு, பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள், உணவு தானியங்களில் ரசாயனப் பொருட்களின் கலப்பு இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது இந்திய உணவு கழக மண்டல பொதுமேலாளர் தாலிவால், உதவி பொதுமேலாளர் முத்துகிருஷ்ணன், தர்மபுரி மாவட்ட கிடங்கு மேலாளர் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் இறுதியில் ஆலோசனைக்குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், "உணவுப்பொருட்கள் பராமரிப்பு தொடர்பாக பல்வேறு பகுதிகளில் உள்ள கிடங்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறோம். இங்கு மாதிரி முறையில் 30 மூட்டைகளில் உள்ள உணவு தானியங்களை ஆய்வு செய்தோம். அவற்றில் 1 மூட்டையில் மட்டும் பூச்சி இருந்தது.

இந்த கிடங்கு சுத்தமான முறையில் பராமரிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. உணவு தானியங்களில் பூச்சிகள் உருவாவதை தடுக்க வேப்பிலைகளை அவற்றில் போட்டு வைக்கும் பாரம்பரிய முறை தமிழகத்தில் நீண்டகாலமாக உள்ளது.

தற்போது உணவு உற்பத்தியில் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் உணவு தானியங்களை பாதுகாப்பதிலும் ரசாயன பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பது உணவு பொருட்களில் அதிக நச்சுத்தன்மை உருவாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

இதனைத் தடுக்க கிடங்குகளில் பாதுகாக்கும் உணவு தானிய மூட்டைகள் மீது வசம்பு பொடியை ஸ்பிரே மூலம் அடித்து பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. இது பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் நல்ல பலனை தந்துள்ளது.

உணவு தானியங்களில் வேப்பிலையை கலந்து வைத்தல், வசம்பு பொடியை தண்ணீரில் கலந்து ஸ்பிரே மூலம் அடித்தல், நொச்சி இலைகளை தானிய மூட்டைகளுக்கு இடையே போட்டு வைத்தல் ஆகிய முறைகளை உணவு தானிய பராமரிப்பில் பயன்படுத்துவது தொடர்பான பரிந்துரையை மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பாஸ்வானிடம் வழங்கி உள்ளோம். இந்த பரிந்துரையை உணவுத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டு அமல்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

பரிந்துரை அமலுக்கு வந்தால் நச்சுதன்மை இல்லாத வகையில் உணவு தானியங்களை பாதுகாக்க முடியும். இதன்மூலம் தமிழகத்தின் பாரம்பரிய உணவு தானிய பாதுகாப்பு முறை மீண்டும் நடைமுறைக்கு வரும்" என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!