
கடலூர்
மண்பாண்ட பொருட்களை வாங்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில், மண்பாண்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டக்குழு சார்பில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் தொழில் நலிவடைந்ததை அடையாளப்படுத்தும் வகையில் தாங்கள் செய்த பானைகள், மண் அடுப்புகளை தலையில் ஏந்தி விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து முழக்கங்கள் எழுப்பியபடி பேரணியாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"விருத்தாசலம் பகுதியில் நடைபெறும் மண்பாண்ட தொழிலைப் பாதுகாத்திட வேண்டும்,
மழைக் காலங்களில் தொழில்செய்ய தனி கொட்டகை அமைத்து கொடுக்க வேண்டும்,
மண்பாண்ட தொழில் செய்ய மண் எடுத்துக்கொள்ள முழுமையான அனுமதி வழங்க வேண்டும்,
தண்ணீர் வசதியுடன் கூடிய களம் மற்றும் சூளை போட தனி இடம் அமைத்துத்தர வேண்டும்,
மண்பாண்ட பொருட்களை வாங்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைப்பெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் கண்டன உரையாற்றினார்.
இதில் நாகராஜ், கண்ணன், பாலகிருஷ்ணன், அந்தோணிசாமி, சங்கர், மீனாட்சி மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்டின் இறுதியில் கோட்டாட்சியர் சந்தோசினி சந்திராவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தனர்.