
புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்
transport workers protest against new motor vehicle act across tamil nadu
திருவாரூர், பழனி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தால் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட சாலை போக்குவரத்து சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதீதமான தண்டனை, ஆன்லைன் அபராதம் முறையை கைவிட வேண்டும், வட்டார போக்குவரத்து அலுவலர் லஞ்சம் வாங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும், ஓட்டுநர் விபத்திற்கான நிவாரண தொகையை 5 லட்சமாக வழங்க வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 15 நிமிடம் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது 15 நிமிடம் வரை வாகனங்களை மறித்து போராட்டம் நடத்திய பிறகே கைது செய்ய வேண்டுமென கூறி கைதாக மறுத்தனர்.
இதையடுத்து காவல் துறையினர், போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போன்று திருவாரூர் மாவட்டம் நகரத்துக்குட்பட்ட ரவுண்டானாவில் ஆட்டோ தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஓடும் வாகனங்களை சாலையில் நிறுத்துவோம் என வாகனம் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.