ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக அதிகரித்ததை கண்டித்து சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் அனைத்து போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக அதிகரித்ததை கண்டித்து சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் அனைத்து போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிஐடியு தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 1977ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து ஊழியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு ஊதியம் மற்றும் இதர பிரச்சினைகளில் தீர்வுகாணப்படுகிறது. 31.8.2019ஆம் தேதியுடன் 13வது ஊதிய ஒப்பந்தம் நிறைவு பெற்றுவிட்டது. 19.2019ஆம் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிமுக அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை உருவாக்க முன்வராத காரணத்தினால், கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்றது. வேலைநிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சட்டமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க;- கையெழுத்தானது 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம்… மகிழ்ச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள்!!
திராவிட முன்னேற்ற கழக ஆட்சி ஏற்பட்ட பின்பு, மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் முன்னிலையில் கடந்த மே மாதம் பேச்சுவார்த்தை துவங்கி 24.8.2022ஆம் தேதி ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது. இவ்வொப்பந்தத்தை ஏற்படுத்துவதிலும், ஒப்பந்தத்தில் தொழிலாளர்களது ஊதியத்தை பே-மேட்ரிக்ஸ் அடிப்படையில் உருவாக்குவதிலும் சிஐடியு முக்கிய பங்கு வகித்தது. ஒப்பந்தத்தில் உள்ள பெரும்பகுதியான சரத்துக்களில் சிஐடியுவிற்கு முழு உடன்பாடு உள்ளது. ஆனால் ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுகளாக நீட்டித்ததில் சிஐடியுவிற்கு உடன்பாடு இல்லை.
ஊதிய ஒப்பந்த காலம்
1977ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டு வந்தது. கடந்த 2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்த காலம் 5 ஆண்டாக மாற்றப்பட்டது. 5 ஆண்டு ஒப்பந்தம் என்பதை 3 ஆண்டாக மாற்ற வேண்டுமென வலியறுத்தி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களால் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. 2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது. தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மீண்டும் ஒப்பந்த காலத்தை 3 ஆண்டாக மாற்றினார்.
இந்நிலையில், அரசு மீண்டும் ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுகளாக மாற்றியது நியாயமற்றது. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தின் மூலம் டே-மேட்ரிக்ஸ் உருவாக்கப்பட்டதால் ஒப்பந்த காலத்தை நீட்டிப்பதாக கூறுகின்றனர். இந்த வாதம் பொருத்தமற்றது, ஊதியக்குழு மற்றும் ஊதிய ஒப்பந்தங்களில் ஒவ்வொரு பிரிவு தொழிலாளிக்கும் சம்பள விகிதம் (பே-ஸ்கேல்) உருவாக்கப்பட்டு அதனடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்படும். 6வது ஊதியக்குழுவில் சம்பள விகிதம் பே-பேன்ட் மற்றும் கிரேடு. பே என மாற்றப்பட்டது. தற்போது 7வது ஊதியக்குழுவில் பே-மேட்ரிக்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. பே-மேட்ரிக்ஸ் என்பது சம்பள விகிதத்தின் புதிய வடிவம்,
அதிமுக ஆட்சிக்காலத்தில் 2018ஆம் ஆண்டு 13வது ஊதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டபோது. 1977 முதல் நடைமுறையில் இருந்த பே-ஸ்கேல் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே ஒப்பந்தத்தில் அனைத்து பிரிவிற்கும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த அடிப்படையில் தனித்தனி பே ஸ்கேல் உருவாக்கப்பட வேண்டுமென கோரினோம். கடந்த ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்ய வேண்டும் என்பதே இக்கோரிக்கையின் அடிப்படையாகும். தொழிற்சங்கங்கள் கோரிய அடிப்படையில், பே-மேட்ரிக்ஸ் பொருத்தி சம்பளம் வழங்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் இதை காரணம்காட்டி ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுகளாக மாற்றியது சரியற்றது. ஏற்கனவே தமிழக அரசின் இதர துறை ஊழியர்களைவிட இப்போதும் போக்குவரத்து ஊழியர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வுபெற்ற ஊழியர்களின் அகவிலைப்படி
அனைத்து துறை ஊழியர்களுக்கும் விலைவாசி உயர்வை ஈடுகட்ட அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், போக்குவரத்து கழகங்களில் ஓய்வுபெற்ற 85,000 ஊழியர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. மறுக்கப்பட்ட நிலுவைத்தொகை மட்டும் இதுவரை சுமார் ரூபாய் 1200 கோடியாகும். அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்க மறுப்பதும், இப்பிரச்சினை நீடிப்பதும் சரியற்றது. பல ஆண்டுகள் போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கு உழைப்பை செலுத்திய ஊழியர்கள் வயதான காலத்தில் கடும் இன்னனுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அகவிலைப்படி உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், ஓய்வூதியர்களின் இதர பிரச்சினைகளை பேசி தீர்வுகாணா வேண்டும் எனவும் மீண்டும் வலியுறுத்தினோம்,
கடந்த 2020 மே மாதத்திற்குப்பின் மரணமடைந்த விருப்ப ஓய்வில் சென்றவர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வுகால பலன்கள் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். இது சம்பந்தமாக முதலமைச்சர் அறிவிப்பார் என பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் தெரிவித்தார். இதை பத்திரிக்கையாளர்களிடமும் தாங்கள் தெரிவிக்க வேண்டும். பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென கூறினோம். ஆனால் பேச்சுவார்த்தைக்குப்பின் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் இது சம்பந்தமாக எதுவும் அறிவிக்கவில்லை.
தொழிற்சங்கங்கள் எழுப்பிய முக்கிய கோரிக்கைகள் சம்பந்தமாக சுமூகமான முடிவுகள் எட்டப்பட்ட நிலையில், ஒப்பந்த காலம் நீட்டிப்பும், ஓய்வூதியர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாததும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழக அரசு ஓய்வூதியர்கள் பிரச்சினையில் உடனடியாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும். ஒப்பந்த காலம் 4 ஆண்டுகள் என மாற்றியதை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் கழகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் சக்தியாக பங்கெடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அரசு ஓய்வூதியர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுகிறோம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஓய்வூதியர்கள் பிரச்சினையில் உடனடியாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகள் என மாற்றியதைக் கண்டித்தும் சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- ஊராட்சி மன்ற தலைவரின் கையெழுத்தை போடும் கணவர்.. சிக்கிலில் திமுக பிரமுகர்..!