
சென்னையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் இல்லத் திருமண விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது உரையாற்றிய கி. வீரமணி, தலைவர் கலைஞர் காலம் முதலே மாநாடுகளைக் கூட்டிப் பழகிய கே.என். நேரு, தற்போது தனது இல்லத் திருமண விழாவையும் ஒரு மாநாடு போலவே மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளதாகப் பாராட்டினார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கழகம் தான் தனது உயிர் மூச்சு, தலைவர் தான் தனது ஒரே இலக்கு என வாழ்பவர் நேரு என்றும், எத்தனை சோதனைகளும் வேதனைகளும் வந்தாலும் அவற்றைத் தாங்கக்கூடிய அஞ்சா நெஞ்சராக அவர் திகழ்கிறார் என்றும் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், திமுகவுக்கு எவ்வளவு உரிமையோ அதே அளவு உரிமை தாய்க்கழகமான திராவிடர் கழகத்திற்கும் நேருவிடம் உண்டு என்றும், திருச்சியில் தாய்க்கழகத்திற்கு அரண் போலத் திகழ்பவர் அவர் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார். தந்தை பெரியார் தொடங்கி வைத்த சுயமரியாதைத் திருமணத்தை பேரறிஞர் அண்ணா சட்டபூர்வமாக்கினார்; கலைஞர் அதனைப் போற்றி வளர்த்தார்; அந்தப் பாரம்பரியத்தில் இன்று மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்தச் சுயமரியாதைத் திருமணம் நடைபெறுவது பெருமைக்குரியது எனக் கூறிய கி. வீரமணி, "விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை" என்ற அறிஞர் அண்ணாவின் அறிவுரையைப் பின்பற்றி மணமக்கள் பகுத்தறிவோடும் அன்போடும் வாழ வேண்டும் என வாழ்த்தினார்.