ரத்தான ரயில்களின் முன்பதிவு கட்டணம் ரீபண்ட்… அறிவித்தது தெற்கு ரயில்வே!!

By Narendran SFirst Published Dec 25, 2021, 4:17 PM IST
Highlights

ரத்து செய்யப்பட்ட 23 ரயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள்,  பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ரத்து செய்யப்பட்ட 23 ரயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள்,  பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வேலுார் மாவட்டம், திருவலத்தில் பொன்னையாற்றின் குறுக்கே, 1865ல், ஆங்கிலேயர் காலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தில் 38, 39வது பில்லர் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் நேற்று மூன்று ரயில்களும், இன்று 23 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. தற்போது ஒருவழி பாதையாக மாற்றி அனைத்து ரயில்களும் மற்றொரு ரயில்வே பாலத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையிலிருந்து பெங்களூரு, திருவனந்தபுரம், கோவை, ஈரோடு மார்க்கத்தில் செல்லும் ரயில்களும், அதே போல அந்த மார்க்கத்திலிருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் பல மணி நேரம் தாமதமாக செல்கின்றன. சென்னையிலிருந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்து வருகின்றனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கடந்த மாதம் பொன்னை ஆற்றில் வெள்ளம் கரைபுண்டு ஓடியது. இதனால் பாலத்தின் பில்லர் பகுதியில் தண்ணீர் தேங்கி மண் அரிப்பு ஏற்பட்டதால் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஜேசிபி இயந்திரம் ஆற்றில் இறக்கி பழுதடைந்த பாலத்தின் பகுதியில் வரும் வெள்ளத்தை தடுத்து வேறு வழியாக திருப்பி விட்டனர். விரிசல் ஏற்பட்ட பகுதியில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டது. இரும்பு சென்டரிங் பொருத்தி விரிசல் ஏற்பட்ட பகுதிகள் இரும்பு பிளேட்டால் சீரமைக்கப்படும். இந்த பணிகள் 10 நாட்கள் நடக்கும். மற்றொரு ரயில்வே மேம்பாலத்தின் உறுதி தன்மையை ஆராய வேண்டியதிருப்பதால் தான் இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் வேலூரில் ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல்  காரணமாக  ரத்து செய்யப்பட்ட 23  ரயில்களில், முன்பதிவு செய்திருந்த பயணிகளின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் திருவலத்தில் பொன்னையாற்றின் குறுக்கே, ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் வழியாகவே காட்பாடி வழியாக சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த மேம்பாலத்தின் பில்லர் பகுதியில் விரிசல் ஏற்பட்டதையடுத்து  அவ்வழியாக ரயில்கள் இயக்கப்படுவது நேற்று மாலை நிறுத்தப்பட்டது.  மேலும்  இன்று அந்த பாதையில்  செல்லும் 23 ரயில்களும்  ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாக அறிவித்தது. அதன்படி பெங்களூரு – சென்னை சதாப்தி, சென்னை – கோவை சதாப்தி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. ஜோலார்பேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா அரக்கோணம் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு செல்ல, முன்பதிவு செய்து காத்திருந்த  பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட 23 ரயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள், பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

click me!