
வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி அதிகாலை 04.17 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 03.06 ஆக பதிவானதாகவும் வேலூருக்கு தெற்கு மற்றும் தென் மேற்கில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டை, தும்பேரி கிராமத்தினர் இந்த அதிர்வை உணர்ந்தனர். எனினும் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என வருவாய் துறை தெரிவித்தாக கூறப்படுகிறது. எனினும் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தட்டபாறை கிராமத்தில் செல்வம் என்பவரின் வீட்டில் விரிசல் விழுந்ததாக கூறப்பட்டது.
இதேபோல் கடந்த 23 ஆம் தேதி, பிற்பகல் 03.14 மணிக்கு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் இது ரிக்டர் அளவுகோலில் 03.05 ஆக பதிவானது. ஆந்திர மாநிலம் சித்தூரில் பூமியிலிருந்து 10 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே டிடி மோட்டூர், தரைக்காடு ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதிமக்கள் கூறினர். வீட்டிலிருந்த பொருட்கள் கிழே விழுந்து சேதாமாகியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பேரணாம்பட்டு பகுதியில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதிமக்கள் தெரிவித்தனர். இன்று காலை 09.30 மணியளவில், ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு முறை சுமார் 3 விநாடிகள் நில அதிர்வு நீடித்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.
இந்நிலையில் பேரணாம்பட்டில் மீண்டும் தற்போது இருமுறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே 3-வது முறையாக இன்று காலையில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் மதியமும் 2 முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.