
சிவகங்கை
அரசு விதிமுறைகளை மீறி நடந்துகொள்ளும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளார்.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேந்தனி கண்ணதாசன் மக்கள் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பி கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினார்.
அந்த மனுவில், "உள்ளாட்சி நிர்வாகங்களில் வீடுகளுக்கு வரி விதிப்பு செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் பற்றி அரசு தெளிவாக கூறியுள்ளது. ஆனால், உள்ளாட்சி அதிகாரிகள் இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் உள்ளனர்.
வீடு கட்டிக் கொள்பவர்களும் அரசு விதிகளை பின்பற்றாமல் கட்டி முடித்த பின்னர் தனது அதிகார செல்வாக்கை பயன்படுத்தி வீடுகளுக்கு வரிவிதிப்பு செய்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்று விடுகின்றனர்.
இதனால் அரசின் வரையறுக்கப்பட்ட எந்தவித விதிமுறைகளும், பின்பற்றப்படாமல் காற்றில் பறக்கவிடப்படுகிறது.
இதுபோல அரசு விதிமுறைகளை மீறி வீடு கட்டுபவர்கள் மீது உள்ளாட்சிகளால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளது. இதன்மூலம் நீதிமன்றங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதேபோன்று வரிவிதிப்புக்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை கண்காணிக்காத அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் முழுக்க முழுக்க உள்ளாட்சி நிர்வாகங்களில் விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வங்கிகளில் கடன்பெறுபவர்கள் மட்டுமே அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கின்றனர். ஆனால், கடன்பெறாதவர்கள் அதிகாரிகளின் உடந்தையுடன் வீட்டு வரிவிதிப்பு செய்து பலனை அனுபவித்து வருகின்றனர்.
இதன்மூலம் அரசு விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வருவாய்த்துறையில் பட்டா பெறுவதற்கு கணினி மயமாக்கப்பட்ட நிர்வாகத்தின் மூலம் தற்போது ஒழுங்குப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் போலிகள் அடையாளம் காட்டப்பட்டு உள்ளனர்.
வீட்டு வரி செய்வதற்கு முன்பு கணினிகளில் வீட்டுமனை கட்டுவதற்குரிய அங்கீகார எண்ணை பெற்றபின் தான் வரிவிதிப்பு செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற விதிமுறைகளை தடுக்க முடியும்.
மேலும், அரசு விதிமுறைகளை மீறி நடந்துகொள்ளும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.