
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் நிர்மலா. இவருக்கு கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் நீலமேகம் மகன் சற்குணன் என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக 75 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணமாகி சில மாதங்களுக்கு பிறகு அவ்வப்போது பணம் வேண்டும் நகை வேண்டும் என்ற அடிப்படையில் சற்குணன் தனது மனைவி நிர்மலாவை சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் போதையில் மனைவியை டார்ச்சர் செய்தும் பணம் கொண்டு வரவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி பேனாவைக் கொண்டு தனது கைகளில் குத்திக்கொண்டு மிரட்டல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு நிர்மலாவின் தந்தை செல்வம் உயிரிழந்துள்ளார். அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் நிர்மலாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அதற்கு முன்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி தந்தை உயிரிழப்பிற்காக நிர்மலாவின் தாய் வீடான சிங்கம்புணரிக்கு சற்குணன் அனுப்பிய நிலையில் நிர்மலாவிற்கு குழந்தை பிறந்தும் நிர்மலாவை வீட்டிற்கு அழைக்காமலேயே இருந்துள்ளார் சற்குணன். பின்னர் இரு குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தி நிர்மலாவை கோவைக்கு அனுப்பிய சூழலில் சில மாதங்கள் மட்டும் நிர்மலாவுடன் கோவையில் வசித்த சற்குணன் மீண்டும் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற காரணத்திற்காக நிர்மலாவை தாய் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.
தடுப்பூசி போட்ட பின்னர் நிர்மலா தன்னை கோவை அழைத்துச் செல்லுமாறு கூறியபோது சற்குணன் தனது நண்பரான நிவாஸ் என்பவரை வைத்து தனது செல்போன் மூலம் அடிக்கடி நிர்மலாவின் செல்போன் என்னை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் நிவாஸ் தனது அண்ணன் என்றும் அவருடன் நீ பேசி பழகினால் தான் மீண்டும் உன்னை கோவைக்கு அழைத்து வருவேன் என்றும் சற்குணன் நிர்மலாவிடம் கூறியுள்ளார். நாளுக்கு நாள் இவர் டார்ச்சர் தாங்க முடியாததால் நிர்மலா நிவாஸ் மீது கடந்த கடந்த 2022ம் ஆண்டு சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சற்குணன் 2023ம் ஆண்டு நிர்மலாவிடமிருந்து தனக்கு விவாகரத்து பெற்று தருமாறு கோரி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது மட்டுமல்லாமல் வக்கீல் நோட்டீஸும் அனுப்பியுள்ளார். தொடர்ந்து கணவன் மனைவியிடையே பிரச்சனை நிலவி வந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் பீளமேடு பகுதியிலுள்ள வீட்டிற்கு குழந்தையுடன் வந்து குடியேறிய நிர்மலா தனது தாயிடம் பணம் வாங்கி குழந்தையை தனியார் பள்ளியில் எல்கேஜி சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார்.
இந்லையில் நேற்று நிர்மலாவின் தாய் ஜெயந்தி பீளமேடு பகுதியிலுள்ள நிர்மலாவின் வீட்டிற்கு வந்து இன்று காலை சற்குணனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் திடீரென இன்று காலை நிர்மலாவின் வீட்டிற்கு வந்த அவரது கணவர் சற்குணன், மாமனார், மாமியார் மற்றும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டிலிருந்த நிர்மலா அவரது தாய் ஜெயந்தி மற்றும் சகோதரர் ஹரிஹரன் ஆகியோரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல் நிர்மலாவையும் அவரது தாய் ஜெயந்தியையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக நிர்மலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்தும் தற்போது வரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நிர்மலா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.