
திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகனுக்கு எதிராக, குறிப்பாக 2007 முதல் 2009 வரை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை வரும் 15ம் தேதிக்குள் அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
2007-2009 காலகட்டத்தில் அவர் தனது வருமானத்தை விட 1.40 கோடி ரூபாய் அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
2017ம் ஆண்டு, இந்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கில் 6 மாதத்தில் விசாரணையை முடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.
அமைச்சர் துரை முருகனின் மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜரான நிலையில் அவருக்கு எதிரான் பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனின் நீண்ட அரசியல் வாழ்க்கை, சட்டமன்றத்தில் பல முறை பதவி வகித்தது, பல்வேறு அமைச்சர் பதவிகள் உட்பட,இந்த வழக்கின் மூலம் சவாலை எதிர்கொள்கிறது.