
மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2024-ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் இந்த தரவரிசை, கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல் வளங்கள், ஆராய்ச்சி, பட்டப்படிப்பு முடிவுகள், புதுமை நடைமுறைகள் உள்ளிட்ட பல முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.
தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடம்
2016-ஆம் ஆண்டு முதல் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தப் பிரிவில், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் இந்தப் பட்டியலில் முதன்மை இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனம் முதலிடத்தைப் பிடித்திருந்தது. தற்போது, அது சென்னை ஐ.ஐ.டி.க்கு அடுத்த இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டு ஒட்டுமொத்தம், பல்கலைக்கழகம், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடக்கலை, வேளாண்மை, புதுமை, திறந்தநிலை பல்கலைக்கழகம், திறன் பல்கலைக்கழகம், மாநில பொது பல்கலைக்கழகம் என 16 பிரிவுகளின்கீழ் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஆறு இடங்களை இந்திய தொழில்நுட்பக் கழகங்களே (ஐ.ஐ.டி) பெற்றுள்ளன.
தரவரிசையில் முதல் 10 கல்வி நிறுவனங்கள்:
1. ஐ.ஐ.டி மெட்ராஸ் - சென்னை, தமிழ்நாடு
2. இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி.) பெங்களூரு - கர்நாடகா
3. ஐ.ஐ.டி பாம்பே - மும்பை, மகாராஷ்டிரா
4. ஐ.ஐ.டி டெல்லி - புது டெல்லி
5. ஐ.ஐ.டி கான்பூர் - கான்பூர், உத்தரப் பிரதேசம்
6. ஐ.ஐ.டி கரக்பூர் - கரக்பூர், மேற்கு வங்கம்
7. ஐ.ஐ.டி ரூர்க்கி - ரூர்க்கி, உத்தராகண்ட்
8. எய்ம்ஸ் - புது டெல்லி
9. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) - புது டெல்லி
10. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் - வாரணாசி, உத்தரப் பிரதேசம்
டாப் 10 கல்லூரிகளில் கோவை
கல்லூரிங்களுக்கான தரவரிசையில் கோவையைச் சேர்ந்த பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி மற்றும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி ஆகியவை 9 மற்றும் 10வது இடங்களைப் பிடித்துள்ளன.
கட்டிடக்கலை பிரிவில் ரூர்கே ஐ.ஐ.டி. முதலிடத்தைப் பிடித்துள்ளது. சட்டப் பிரிவில் பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. மருத்துவப் பிரிவில் டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) இந்தப் பிரிவில் 3-வது இடத்தைப் பெற்றுள்ளது. பல் மருத்துவப் பிரிவில் டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) முதலிடத்திலும், சென்னையின் சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 2-வது இடத்திலும் உள்ளன.
ஆராய்ச்சி பிரிவில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி. 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. புதுமை கண்டுபிடிப்புகள் அடிப்படையிலான தரவிசையில், சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 9-வது இடத்தைப் பெற்றுள்ளது. மாநில பொது பல்கலைக்கழகங்கள் டாப் 10 வரிசையில் ஜடவ்பூர் பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2-வது இடத்தைப் பெற்றுள்ளது.
திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் டெல்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. திறன் பல்கலைக்கழகளில் புனேவில் உள்ள சிம்போசிஸ் திறன் மற்றும் தொழில் பல்கலைக்கழகம் இந்தப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.