
தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 14 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசன வசதிக்காக , கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஜீவாதாரமாக திகழும் மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்பட 12 மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை 230 நாட்களுக்கு டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படும். மேட்டூர் அணை நீர் மட்டம் 90 அடியாக இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை கை கொடுக்காததாலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்காததாலும் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
இந்த ஆண்டும் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி அணையின் நீர்மட்டம் வெறும் 20 அடியாக இருந்ததால் குறித்த காலத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட வில்லை.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை நன்கு பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 94 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து அக்டோபர் 2 ஆம் தேதி தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று முன் தினம் காலை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன், கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தனர்.
இதையடுத்து பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் தஞ்சை, திருவாரூர், காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 14 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கல்லணையில் இருந்து நீர்திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைண்ணு, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.