சிறுநீர் கழிக்க ஒதுங்கிய காவலரை சரமாரியாகத் தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்!

First Published Oct 4, 2017, 9:30 AM IST
Highlights
police head constable beaten by auto drivers arrested in ambur


வேலூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில், இயற்கை உபாதையைக் கழிக்க, ஓரமாக ஒதுங்கிய காவலர் குணசேகரனை கண்மூடித்தனமாகத் தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் தனிபிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் குணசேகரன். இவர் இரவுப் பணியாக வேலூர் செல்வதற்கு ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக, பேருந்து நிலையத்தில் உள்ள கடையின் அருகே சென்று சிறுநீர் கழித்துள்ளார். இதைக் கண்ட அந்தக் கடையின் உரிமையாளர் சந்திரன்,  தனிப்பிரிவு தலைமைக் காவலர் குணசேகரனை கண்டபடி திட்டி, தரக்குறைவாகப் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இந்நிலையில், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் சந்திரனுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு வந்து, காவலர் குணசேகரனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த குணசேகரன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆம்பூர் போலீஸார், கடை உரிமையாளர் சந்திரன், தாக்குதலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் என நால்வரையும் கைது செய்து நான்கு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர்.

click me!