
மதுரையில் திருமணமான 15 நாளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் ஒருவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடியை சேர்ந்தவர் தங்கச்சாமி. 27 வயதான இவர் மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ்காரர்.
இவருக்கு, கடந்த மாதம் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தங்கசாமி கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப் பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் டெங்கு உறுதியானதால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
புது மாப்பிள்ளையான தங்கசாமி, விருந்துக்காக, மதுரை செல்லுாரில் உறவினர் வீட்டிற்கு வந்த போது, காய்ச்சல் ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே மதுரை செல்லுாரில், பள்ளி சிறுமி சஞ்சனா, டெங்கு பாதித்து பலியானார். தற்போது செல்லுார் வந்த போலீஸ்காரரும் உயிரிழந்தார்.
திருமணமான 15 நாட்களில் போலீஸ்காரர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.