நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி விலையானது மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.45க்கு விற்ற தக்காளி விலை, இன்று ரூ.100ஐ தொட்டுள்ளது. சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளி விளையும் பகுதிகளில் ஏற்பட்ட கனமழை காரணமாக வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தக்காளி விளைச்சல் பாதிப்பு, வெளி மாநிலங்களிலிருந்து வரத்துக் குறைவு போன்ற காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.120 வரை விற்ற நிலையில், அதேபோன்றதொரு நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர், தக்காளி விலை கிலோ ரூ.100க்கு விற்கப்படுவது இதுதான் முதல்முறை என சுட்டிக்காட்டப்படுகிறது.
கோவை எம்ஜிஆர் மார்க்கெட்டில் கடந்த திங்கள்கிழமை 25 கிலோ தக்காளி பெட்டியின் மொத்த விலை ரூ.2,000 ஆக இருந்தது. அதாவது, கிலோவுக்கு ரூ.80. அதுவே சில்லறை விற்பனை கடைகளில், கிலோவுக்கு ரூ.100 வரை உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு, தினசரி 10,000 தக்காளி பெட்டிகள் சந்தைக்கு வந்ததாகவும், இந்த எண்ணிக்கை பின்னர் 5000ஆக குறைந்ததாகவும், கடந்த திங்கள்கிழமை வெறும் 1,500 பெட்டிகள் மட்டுமே வந்ததாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகரில் மட்டும் நாள் ஒன்றுக்கு 2,000 தக்காளி பெட்டிகள் தேவைப்படுகின்றன. ஆனால், வரத்து குறைவு காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், தக்காளி விலை வீழ்ச்சியால், தக்காளி விவசாயிகள் சாகுபடியை கைவிடவும் திட்டமிட்டனர். கடுமையான நஷ்டம் காரணமாக விவசாயிகள் தங்களது பயிர்களை நாசம் செய்தனர். அப்போது தக்காளி விலை கிலோ ரூ.2ஆக இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 1200 டன் தக்காளிக்கான தேவை என்ற நிலையில், 700 டன் மட்டுமே வந்து கொண்டிருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதாவது, கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் வெளிமாநில தக்காளி வரவு 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. தக்காளி தட்டுப்பாடு காரணமாக சென்னை கோயம்பேடு மொத்த விலை சந்தையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. சென்னை சில்லறை கடைகளில் ரூ.100 வரை விற்கப்படுகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் தக்காளி விலை கிலோ ரூ.110க்கு மேல் விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு டிஜிபி ரேஸில் சஞ்சய் அரோரா? புதிய திருப்பம்!
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக்க மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரும் தக்காளியின் வரத்தும் குறைந்துள்ளது. அதேபோல், தற்போது கோவையில் தக்காளி சாகுபடி செய்யப்படாததால், கிருஷ்ணகிரி, ஓசூர், கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தே தக்காளி வரத்து உள்ளது. இந்த வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளதால், தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
“பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தக்காளி குறைவாகவே பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பீன்ஸ் விலை உயர்ந்ததால், பல விவசாயிகள் இந்த ஆண்டு பீன்ஸ் விதைத்தனர். ஆனாலும், பருவ மழை சரியாக பெய்யாததால் பயிர்கள் கருகி வீணாகின. வெப்ப அலை மற்றும் கனமழை காரணமாக காய்கறிகள், குறிப்பாக தக்காளி வரத்து குறைவாகவே உள்ளது.” என மும்பையைச் சேர்ந்த கேடியா அட்வைசரியின் தலைவரும், பல்பொருள் சந்தை நிபுணருமான அஜய் கேடியா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் தக்காளி விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. கனமழை காரணமாக கர்நாடகாவில் தக்காளி அதிகம் விலையும் மாவட்டங்களான கோலார், சிக்கபெல்லாபுர், ராமநாகரா, சித்ரதுர்கா ஆகிய பகுதிகளில் தக்காளி உற்பத்தியும், விநியோகமும் குறைந்துள்ளது. அதேபோல், டெல்லியில் கிலோ ரூ.80க்கு விற்கப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்ட தக்காளி, தற்போது ரூ.100க்கு விற்கப்படுகிறது.
நமது அன்றாட உணவு பழக்கத்தில் தக்காளி இன்றியமையாததாக மாறியுள்ள நிலையில், தக்காளி விலை உயர்வால், இல்லத்தரசிகள் தக்காளி வாங்குவதை குறைத்துக் கொண்டனர். உணவு சமைக்கவும் குறைவான தக்காளியை பயன்படுத்தி வருகிறார்கள். சில ஹோட்டல்களில் தக்காளி சட்னி பரிமாறுவது நிறுத்தப்பட்டுள்ளது.