தமிழகத்தில் இன்று 8வது தடுப்பூசி முகாம்… வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

By Narendran SFirst Published Nov 14, 2021, 11:25 AM IST
Highlights

#vaccinationcamp | தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதை அடுத்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய 10 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை 100 கோடிக்கும் மேலான டோஸ்  தடுப்பூசி போடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணி மிக துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாத மக்கள், பிறகு கூட்டம் கூட்டமாக போட்டுக்கொள்ள தொடங்கினர். இதனால், பொது மக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் தடுப்பூசி மெகா முகாம்களுக்கு  ஏற்பாடு தடுப்பூசி போட வசதியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி 28.91 லட்சம் பேருக்கும், 19 ஆம் தேதி 16.43 லட்சம் பேருக்கும், 26 ஆம் தேதி 25.04 லட்சம் பேருக்கும், அக்டோபர் 3 ஆம் தேதி  17.04 லட்சம் பேருக்கும், கடந்த 10 ஆம் தேதி  22.85 லட்சம் பேருக்கும், கடந்த 23 ஆம் தேதி 22.33 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரு கோடியே 57 லட்சத்து 13 ஆயிரத்து 382 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 8வது கொரோனா  தடுப்பூசி முகாம் கடந்த 6 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் கனமழை பெய்ததை அடுத்து அந்த முகாம் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே 2வது தவணை கோவாக்சின் தடுப்பூசி 13 லட்சம் பேருக்கும், கோவிஷீல்டு  தடுப்பூசி 48 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்திருந்தனர்.

தமிழகத்தில் ஏற்கனவே 7 கட்டங்களாக முகாம் நடைபெற்ற நிலையில், இன்று 8வது கட்டமாக கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் முதல் மற்றும் 2 வது கட்ட தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை செய்து வருகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே நேற்று தமிழகம் முழுவதும் 5000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!