
தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுவதையொட்டி முக்கிய சுற்றுலாத் தளங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு கடற்கரை மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூடுவது வழக்கம். சென்னையை பொருத்தமட்டில் மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இதுதவிர கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் எந்த வித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
பாதுகாப்பு கருதி கடலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கடலில் குளிக்க யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என்பதற்காக சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முறை சில வருடங்களாக மெரினாவில் காணும்பொங்கல் அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலோரக்காவல் படை சார்பில் ஹெலிகாப்டர் மூலமாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வீரர்கள் ஹெலிகாப்டரில் மெரினா கடற்கரையை கண்காணிப்பார்கள்.
இதே போன்று தமிழகம் முழுவதும் சுற்றுலாத் தளங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.