
விருதுநகர்
ரேசன் கடையின் பூட்டை உடைத்து சர்க்கரை, எண்ணெய், சேமியா போன்ற பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் திருடிய பொருட்களை மீண்டும் அதேக் கடையிலே கொண்டுவந்து ஒப்படைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி, மறையூரில் பகுதி நேரம் செயல்படும் ரேசன் கடை ஒன்று உள்ளது.
இந்தக் கடை வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டும் செயல்படும். இதன் விற்பனையாளர் ரவிச்சந்திரன்.
ஜனவரி 8-ல் ரவிச்சந்திரன் ரேசன் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்துவிட்டு மாலையில் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு கடையை திறக்க ரவிச்சந்திரன் வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது கடையிலிருந்த 50 கிலோ சர்க்கரை மூட்டை, பாமாயில் எண்ணெய் ஒரு பெட்டி மற்றும் சேமியா பாக்கெட் ஒரு பெட்டி போன்றவரை திருடு போயிருந்தது .
இதுகுறித்து உடனே நரிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் ரவிச்சந்திரன். சம்பவ இடத்திற்கு வந்த நரிக்குடி காவலாளர்கள் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டு இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில்தான், ரேசன் கடையில் திருடப்பட்ட பொருட்கள் அனைத்தையும் திருடிய மர்ம நபர்களே கடை வாசலின் முன்பு வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
விற்பனையாளர் ரவிச்சந்திரன், அந்த பொருட்களை பார்த்தபோது அதில், சர்க்கரை, எண்ணெய், சேமியா பாக்கெட் என அனைத்தும் சரியாக இருந்தது. அதனைக் கண்டு வியந்தார். பின்னர், காவலாளர்களுக்கு இதுகுறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவலாளர்கள் விசாரிக்கிறார்கள் என்று தெரிந்து பொருட்களை திரும்ப ஒப்படைத்தனரா? அல்லது மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் பொருளில் கை வைக்கக் கூடாது என்று நினைத்து திரும்ப ஒப்படைத்தனரா? என்பது கேள்விக் குறியே.