
அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ,பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தினர்
தமிழக அரசு மேற்கொண்ட நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின், ஜல்லிக்கட்டு மீதான தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. இதையடுத்து , கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தாமதமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன.
இந்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தின்றும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதனிடையே உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,050 காளைகள் இங்கு வந்து உள்ளன. இந்த காளைகளுக்கு, கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்து தகுதிச்சான்று கொடுத்து உள்ளனர்.
இதேபோல் காளைகளை அடக்க தமிழகம் முழுவதிலும் இருந்து மாடுபிடி வீரர்கள் அலங்காநல்லூரில் குவிந்து உள்ளனர். அவர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தம் 1,241 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்று இருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக அலங்காநல்லூர் விழாக்கோலம் பூண்டு உள்ளது. ஜல்லிக்கட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் வர்ணம் பூசப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகள் அணிவகுத்து நிற்கும் இடம் முழுவதும் பந்தல் போடப்பட்டு இருக்கிறது. வாடிவாசல் அருகில் இருந்து காளைகள் ஓடி நிற்கும் இடம் வரை இருபுறமும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சவுக்கு கட்டைகளால் இரண்டு அடுக்கு தடுப்புகள் அமைத்து உள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக் கட்டு போட்டியை தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.