லாஸ்ட் சான்ஸ்.! 15 ஆண்டுகள் ஆகியும் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்கவில்லையா.? விண்ணப்பிக்க அழைப்பு

By Ajmal Khan  |  First Published Dec 31, 2024, 10:30 AM IST

பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் இன்றுக்குள் பெயரைச் சேர்க்க வேண்டும். 12 மாதங்களுக்குப் பிறகு பெயர் சேர்க்க கட்டணம் உண்டு. சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.


குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழுக்காக விண்ணப்பிக்கப்படும். அதில் ஆண் அல்லது பெண் என்ற பதிவு மட்டுமே இருக்கும், எனவே சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும்.  ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்தக் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்துக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் சம்பந்தப்பட்ட பிறப்பு மற்றும்  இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்தவித கட்டணமும் இன்றி பெயரை பதிவு செய்திடலாம். 

Tap to resize

Latest Videos

பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்க வாய்ப்பு

ஆனால் 12 மாதங்களுக்கு பிறகு பெயரை சேர்ப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் 12 மாதங்களுக்கு பின்னர் குழந்தையின் பெயரை 15 ஆண்டுகளுக்குள் உரிய கால தாமத கட்டணம் 200 ரூபாய் செலுத்தி பதிவு செய்திட பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த 2000ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு 2014ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. ஆனால் அந்த தேதிக்குள்ளும் பெயரை சேர்க்காத காரணத்தால்  வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை பெற மற்றும் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற சிரமம் ஏற்பட்டது. 

இன்றே கடைசி நாள்

இதனையடுத்து மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. எனவே பதிவு செய்யாதவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம். அந்த வகையில் பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளிச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்னை மாநகராட்சி பிறப்பு மற்றும் இறப்புபதிவு அலுவலகம், மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனியும் காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!