தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு ரொக்கப் பணம் வழங்காதாது பொருத்தமானது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,000 இல்லை
ஆனால் பொங்கள் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் நிலையில், இந்த ஆண்டு ரொக்கம் குறித்து தமிழ்நாடு அரசு ஏதும் அறிக்காதது மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ரூ.1,000 ரொக்க பணத்தை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் விளக்கம்
இதனைத் தொடர்ந்து கனமழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிக்கவில்லை. ஆகையால் நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்பட மாட்டாது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னர்சு விளக்கம் அளித்தார். இந்நிலையில், இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு செய்தது சரியல்ல என்று திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விமர்சனம் வைத்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ''பொங்கல் தமிழர்களின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழா ஆகும். பொங்கல் சிறப்பாக கொண்டாட மக்கள் தயராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பாரபட்சமாக நடந்து கொள்வது
அதேநேரத்தில் வழக்கமாக வழங்கப்படும் பொங்கலுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். தமிழக நிதியமைச்சர் கூறிய மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்வது. இயற்கை பேரிடருக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை தராமல் சொற்ப நிதியை வழங்கியிருப்பது, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்ற காரணங்கள் அனைத்தும் ஏற்கத்தக்கது தான்.
பொருத்தமான செயல் அல்ல
இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி வழங்க மறுப்பது பொருத்தமல்ல. எனவே, தமிழ்நாடு அரசு நிதி சிரமம் இருப்பினும், பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றப்படுவதைப் போல இந்த ஆண்டு பொங்கலுக்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகையாக ரூ. 1000/- வழங்கிட முன்வர வேண்டுமென்று சிபிஐ (எம்) மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.