
நாட்டின் தனிச்சிறப்புப் பெற்ற பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அவற்றிற்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர் ப.சஞ்சய்காந்தி செய்தியாளார்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.
அதில், “நம் நாட்டில் 225 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 25 பொருட்களுக்குப் வழங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
அப்படி வரிவிலக்கு அளிக்கப்படவில்லை என்றால் உணவு பொருட்கள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பாதிக்கப்படும்.
நம் நாட்டின் தனிச்சிறப்பு பெற்ற பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், மத்திய அரசு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க வேண்டும்.
அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீடு வாரியத் தலைவர், உறுப்பினர் பதவி ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தபோது காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.
எனவே, காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வேண்டும்” என்று சஞ்சய்காந்தி தெரிவித்தார்.