
அரசு உதவிபெறும் பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிட பள்ளிக் கல்வித்துறை உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலர் பொ.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலர் பொ.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “பள்ளிக் கல்வியை சீரமைக்க 37 புதிய அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். ஆனால், அதில் சிறுபான்மையினரல்லாத அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் நியமனம் குறித்த விதிகள் மாற்றப்படவில்லை.
தமிழகம் முழுவதிலும் 1165 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.
1974-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்காற்று விதிகளின்படி தகுதி மற்றும் திறமை அடிப்படையில் பள்ளி நிர்வாகம் தலைமையாசிரியரை நியமிக்கலாம்.
இதனால், பணிமூப்பு பின்னக்குத் தள்ளப்பட்டு பணம், சாதி மற்றும் மதம் போன்றவை முக்கியத்துவம் பெற்று தலைமையாசிரியரை நியமிப்பதால் பணியில் மூத்தோர் தகுதியும், திறமையும் இருந்து தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடிவதில்லை.
எனவே, அரசு பள்ளிகளில் பணிமூப்பு அடிப்படையில் தலைமையாசிரியர் பதவி உயர்வு இருப்பதைப்போன்றே அரசு உதவிபெறும் பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிட பள்ளிக் கல்வித்துறை உரிய மாற்றங்களை செய்ய வேண்டும்” என்று கூறினார்.