
சிவகங்கையில் டாஸ்மாக் சாராயக் கடையை திறக்கும் முன்பு அந்தக் கடையை முற்றுகையிட்டும், அதற்கு பூட்டுப் போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் சாராயக் கடைகள் மூடப்பட்டன. ஆனால், மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு பதிலாக கிராமப் புறங்களில் கடைகள் திறக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி பல இடங்களில் அதிகாரிகளே கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு காவலாளர்கள் பாதுகாப்பு வேறு.
இதேபோல் மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி கிராமத்தில் டாஸ்மாக் சாராயக் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த முடிவு கைவிடப்பட்டது.
இந்த நிலையில் கீழமேல்குடி கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனியார் இடத்தில் பார் வசதியுடன் டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டது.
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் கீழமேல்குடி கிராமம் இருப்பதால் மக்கள் பலரும் நடந்தே கிராமத்திற்குச் சென்று வருகின்றனர். மேலும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் மானாமதுரை வந்து செல்கின்றனர்.
தற்போது இப்பாதையில் டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டுள்ளதால், இங்கு ஏராளமான குடிகாரர்கள் வந்து செல்வதுடன், மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதால் அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கீழமேல்குடி மக்கள் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக்கோரி ஆட்சியருக்கு மனு கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதிப் பெண்கள் நேற்று கடைத் திறப்பதற்கு முன்பாகவே முற்றுகையிட்டதுடன், கடைக்கு பூட்டும் போட்டு அதகளம் பண்ணினர்.
இதுகுறித்து தகவலறிந்த மானாமதுரை தாசில்தார் உமா மற்றும் காவலாளர்கள் போராட்டம் நடத்தியப் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
“கடையை மூடினால் மட்டுமே கலைந்து செல்வோம்” என்று பெண்கள் கூறியதையடுத்து டாஸ்மாக் சாரயக் கடையை மூட தாசில்தார் உத்தரவிட்டார். கடை மூடப்பட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.