
Amit Shah To Participate In BJP Booth Committee Conference In Nellai: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக இந்த முறை போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக அமித்ஷா அடிக்கடி தமிழகம் வந்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல் ஆகஸ்ட் 22 அன்று திருநெல்வேலியில் நடைபெறவுள்ள பாஜகவின் பூத் கமிட்டி மாநாட்டில் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளார்.
அமித்ஷா பங்கேற்கும் பூத் கமிட்டி மாநாடு
இந்த பூத் கமிட்டி மாநாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை நெல்லை பாஜகவினர் செய்து வரும் நிலையில், அமித்ஷா பங்கேற்கும் பூத் கமிட்டு மாநாட்டுக்கு நெல்லை போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என பாஜகவினர் பரபரப்பு குற்றம்சாட்டினார்கள்.
காவல்துறையை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
இது தொடர்பாக நெல்லை பாஜக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ''திருநெல்வேலி மாநகர காவல்துறையை கண்டித்து 20.08.2025 அன்று மாலை 5.00 மணி அளவில் வண்ணாரபேட்டை ரவுண்டானா அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருநெய்வேலி வடக்கு மாவட்டத்தில் மாநில தலைவர் தயினார் நாகேந்திரன் MLA தலைமையில் பூக் கமிட்டி மாநாடு வருகின்ற 22.08.2025 அன்று நடைபெறவிருக்கிறது.
ஒருமையில் பேசினாரா நெல்லை துணை போலீஸ் கமிஷனர்?
மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ளவிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கமுடியாது என்றும் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒருமையில் பேசி நான் நினைத்தால் உங்களால் திருநெல்வேலியில் பூத் கமிட்டி மாநாடு நடத்த முடியாது என்று மிரட்டல் விடுத்த திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் பிரசன்னகுமாரை கண்டித்து நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் M.R.காந்தி தலைமையில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறவிருக்கிறது'' என்று கூறப்பட்டு இருந்தது.
பாஜக குற்றச்சாட்டுக்கு காவல்துறை மறுப்பு
இந்நிலையில், அமித்ஷா பங்கேற்கும் பூத் கமிட்டு மாநாட்டுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்ற பாஜகவினர் குற்றச்சாட்டை நெல்லை போலீஸ் மறுத்துள்ளது. நெல்லையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பூத் கமிட்டி மாநாட்டுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது தவறான தகவல். இந்த மாநாட்டுக்கான பேனர்கள் வைப்பது தொடர்பாகத் தான் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று நெல்லை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.