
ராஜஸ்தானில் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் 5 பேர் நாளை தமிழகம் வர உள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஆணை பிறபித்தது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் இயற்ற முடியாது என நேரடியாகவே தெரிவித்தனர்.
கேரளா மாநிலம் ஒரு படி மேலே சென்று மாட்டிறைச்சி தடைக்கு எதிராக அவசர சட்டம் நிறைவேற்றியது.
ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து விரைவில் பதிலளிக்கபடும் என்றே கூறி வருகிறார். இதனிடையே பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பலர் அவ்வபோது வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் உரிய அனுமதியுடன் ராஜஸ்தானில் இருந்து லாரியில் பசு மாடுகள் மற்றும் கன்றுகுட்டிகளை ஏற்றி வந்துள்ளனர்.
அப்போது இதைபார்த்த பசு பாதுகாவலர்கள் தமிழக அதிகாரிகளை தாக்கி லாரிகளுக்கு தீ வைக்க முயற்சி செய்தனர். மேலும் பசுக்களை மீட்டு கோசாலைகளில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் அதிகாரிகள் வருவதற்கு காலதாமதம் ஆனதால் அதிகாரிகள் பலமாக தாக்கப்பட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும், நடவடிக்கை எடுக்காத 7 போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் நாளை தமிழகம் வர உள்ளதாகவும், அதிகாரிகள் 5 பேரும் பாதுகாப்புடன் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
5 லாரிகளில் 50 கால்நடைகளை போலீஸ் பாதுகாப்புடன் தமிழகம் வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.