குத்தகை தொகை செலுத்தாத திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல்: தமிழ்நாடு அரசு விளக்கம்!

By Manikanda Prabu  |  First Published Jun 14, 2024, 7:32 PM IST

திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் சர்ச்சை தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது


அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூடும் முயற்சியில், திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அரசுக்குச் சொந்தமான இடத்தை, 1994 ஆம் ஆண்டு முறையாக குத்தகை பெற்று, சுமார் 30 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வரும் எஸ்.ஆர்.எம்.குழுமத்தினை, உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் சர்ச்சை தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு கிராமத்தில் 4.70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் எஸ்.ஆர்.எம் ஓட்டல் நிறுவனத்திற்கு, கடந்த 1994-ஆம் ஆண்டில் 30 வருட காலத்திற்கு குத்தகை விடப்பட்டது. மேற்படி இடம் குத்தகைதாரருக்கு 14.06.1994 அன்று ஒப்படைக்கப்பட்டது.  இது தொடர்பாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம்.  ஓட்டல் நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் சம்மதித்து கையெழுத்திடப்பட்ட  இந்த குத்தகை ஒப்பந்தமானது கடந்த 13-6-2024 அன்றுடன் முடிவடைந்து விட்டது.

Tap to resize

Latest Videos

undefined

1994ஆம் ஆண்டு குத்தகை வழங்கப்பட்ட அரசாணையின்படி, மேற்படி நிலத்திற்குச் சந்தை விலையின் அடிப்படையில், 7 சதவீதம் வருடாந்திர குத்தகைத் தொகை கணக்கிட்டு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 30 ஆண்டு காலத்திற்கு குத்தகைத் தொகை ரூ.47,93,85,941/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில், நாளது தேதி வரை  குத்தகைதாரர் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் செலுத்திய தொகை ரூ.9,08,20,104/- மட்டுமே.  மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.38,85,65,837/-ஐ குத்தகைதாரர் இதுவரை செலுத்தவே இல்லை.  இவ்வாறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் 30 ஆண்டுகளாக முழுமையான குத்தகை தொகையைச் செலுத்தாமல் எஸ்.ஆர்.எம். நிறுவனம் தனது ஹோட்டலை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

குத்தகை ஒப்பந்தத்தில், மேற்படி நிலமானது 14.06.1994 முதல் 13.06.2024 வரையிலான 30 வருட காலத்திற்கு மட்டும் தான் குத்தகைக்கு விடப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் குத்தகைக் காலத்தை மேலும் நீட்டிக்க ஒப்பந்தக்காரர் கோரக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குத்தகை முடியும் நாளில் குத்தகைதாரரால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு எவ்வித நிபந்தனையுமின்றி நிலம் மற்றும் கட்டடங்களை எவ்வித சேதாரமுமின்றி ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தின் சாராம்சத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஜி7 உச்சி மாநாடு: உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!ஜி7 உச்சி மாநாடு: உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

மேலும் நிலுவைத் தொகையை செலுத்த 02.05.2024 நாளன்று (ஒரு மாத காலத்திற்கு முன்பாக) குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல்,  குத்தகைக் காலம் 13.06.2024 அன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்ததாரரால் நாளது தேதி வரை நிலுவைத் தொகை ரூ.38,85,65,837/-  செலுத்தப்படாமல்  இன்னும் நிலுவையாகவே உள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, சில ஊடகங்களில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் சார்பாக தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குத்தகைக் காலம் முடிவடைந்ததாலும், குத்தகைதாரர் முறையாக, முழுமையான குத்தகைத் தொகையைச் செலுத்தாததாலும்,  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அரசாணை மற்றும் ஒப்பந்தத்தின்படிதான் முறையான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!