தமிழ்நாட்டில் 2,356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்... அறிவித்தது தமிழக அரசு!!

By Narendran SFirst Published Jan 26, 2022, 3:55 PM IST
Highlights

தமிழ்நாட்டில் 2,356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் 2,356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்  வேகமாக பரவி வருகிறது. கடந்த மே மாதம் தொற்றுப் பரவல் அதிகரித்ததன் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து படிப்படியாக  கொரோனா தொற்று குறைந்து வந்தது.  இதை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதுடன், கொரோனாவுடன் வாழ பழகி தொடங்கிவிட்டனர். இப்படியாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  வந்தது. இந்த சூழலில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் ஆகிய இரண்டும் சேர்ந்து மூன்றாம் அலையாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக தினசரி தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரம் தொட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,48,469 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,055 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 30,055 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 48 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,312 ஆக உள்ளது. தற்போது கொரோனா பெருந்தொற்றானது மேலும் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்த வண்ணம் உள்ளதால்,  சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. அத்துடன் மூன்றாம் அலை தொடங்க தொடங்கியுள்ள நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின்  எண்ணிக்கையும் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2,356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,868 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.  செங்கல்பட்டில் 121, தஞ்சாவூரில் 62 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி, கரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், விழுப்புரம், மயிலாடுதுறை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!