அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழக்கு: கோப்புகளை பெற்றுக் கொண்ட ஆளுநர் மாளிகை - வெளியான ஒப்புகை சீட்டு!

Published : Jul 07, 2023, 04:49 PM IST
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழக்கு: கோப்புகளை பெற்றுக் கொண்ட ஆளுநர் மாளிகை - வெளியான ஒப்புகை சீட்டு!

சுருக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழக்கு தொடர்பான கோப்புகளை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டுகள் வெளியாகியுள்ளன

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளை விசாரிப்பதற்கான நீதிமன்றங்கள் அமைப்பதற்கு அனுமதி, நீண்ட கால நிலுவை மற்றும் மசோதாக்களுக்கான ஒப்புதல் தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் மீதான வழக்கு விசாரணையை தொடங்குவதற்கு சிபிஐ இசைவு ஆணையை கோரியது. மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால், ஆளுநர் மாளிகையில்  இருந்து இதுவரையில் அந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரி அதற்கான கடிதங்கள் முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. இவற்றுக்கும் எந்த பதிலும் வரவில்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேகதாது அணைக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை - கர்நாடக பட்ஜெட் உரையில் சித்தராமையா திட்டவட்டம்!

இந்த கடிதத்துக்கு பதிலளித்த ஆளுநர் மாளிகை, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும், அந்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தது. மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான வழக்கில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் நகலை சமர்ப்பிக்கவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக மாநில அரசிடம் இருந்து எந்த கோரிக்கை மனுவோ, கடிதமோ வரவில்லை எனவும் ஆளுநர் மாளிகை அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை பெற்றுக் கொண்டு ஆளுநர் மாளிகை அளித்த ஒப்புகை சீட்டுகள் வெளியாகி உள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஊழல் வழக்கு விசாரணையின் கோப்புகளை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை எனவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்கான இசைவாணையே தமிழ்நாடு அரசு கோரவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்த நிலையில், அந்த கோப்புகளை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டுகள் வெளியாகியுள்ளன. 

கோப்பை பெற்றுக்கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டுவிட்டு அறிக்கை கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று கூறியிருந்த நிலையில், அதனை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி மற்றும் நடப்பாண்டு மே மாதம் 15ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை பெற்றுக் கொண்ட ஆளுநர் மாளிகை, அதற்கான ஒப்புகை சீட்டும் அளித்துள்ளது. அந்த ஒப்புகை சீட்டுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!