அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி; இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும் - இராமதாஸ் கோரிக்கை

By Velmurugan s  |  First Published May 16, 2024, 2:46 PM IST

அரசு கலைக்கல்லூரிகளில் சேர தமிழகம் முழுவதும் கடும் போட்டி நிலவும் நிலையில் மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்ப இடங்களை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 164  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்காக  நேற்று வரை 1.81 லட்சம் மாணவ, மாணவியர்  விண்ணப்பித்துள்ளனர்.  இம்மாதம் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் விண்ணப்பதாரர்களில் எண்ணிக்கை 3 .5 லட்சத்தைத் தாண்டும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் சேருவதற்காக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது  மகிழ்ச்சியளிக்கிறது.  ஆனால், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும்  எடுக்காதது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் 140 பாடப்பிரிவுகளில்  மொத்தம் 1.07 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இது விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகும்.  விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 25%  உயர்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது.  அவ்வாறு உயர்த்தப்பட்டாலும் கூட விண்ணப்பித்த மாணவர்களில்  40 விழுக்காட்டினருக்குக் கூட அரசு கல்லூரிகளில்  இடம் கிடைக்காது.

Tap to resize

Latest Videos

தேனியில் சாலையோரம் நின்ற காரில் இருந்து 3 சடலங்கள் மீட்பு

அரசு கலைக் கல்லூரிகளில் சேர கடந்த 2022&-23ஆம் ஆண்டில் 2.98 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 2023&-24 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.02 லட்சமாக அதிகரித்தது. நடப்பாண்டில் இது 3.50 லட்சத்தைக் கடக்கக்கூடும். ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில்,  அதை கருத்தில் கொண்டு மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க  அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.  ஆனால்,  தமிழக அரசின் சார்பில் இன்றுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையினர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பொருளாதார வசதியற்றவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் மறுக்கப்பட்டால், அவர்களால் கண்டிப்பாக உயர்கல்வி கற்க முடியாது. இது உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேபோல்.  கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் வேலைவாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவுத்திறன்  சார்ந்த படிப்புகளுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு காணப்படுகிறது.  ஆனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்தப் பாடப்பிரிவு இன்னும் தொடங்கப்படாதது  மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் இந்த ஏமாற்றம் போக்கப்பட வேண்டும்.

வைகாசி விசாக திருவிழா; பழனி ஆண்டவர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடக்கம்

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தவர்களின்  பெரும்பான்மையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில்  அக்கல்லூரிகளின்  மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும். அதேபோல், குறைந்தது 50 கல்லூரிகளிலாவது நடப்பாண்டிலேயே செயற்கை நுண்ணறிவுத்திறன் சார்ந்த படிப்புகளைத்  தொடங்க வேண்டும். அதற்கேற்ற வகையில் கட்டமைப்புகளையும், ஆசிரியர் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் ஏழை மாணவ, மாணவியர் அரசு கல்லூரிகளில் சேர்வது உறுதி செய்யப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

click me!