
உழவர் சந்தையை புதிதாக ஏற்படுத்தவும், ஏற்கெனவே இருக்கும் உழவர் சந்தையை புனரமைக்கவும், வசதிகளை மேம்படுத்தி தரம் உயர்த்தவும் தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பேசியதாவது:
50 சந்தைகள்
தமிழகத்தில் இயங்கும் 160 உழவர் சந்தைகளில் விவசாயிகளின் பங்கேற்பை மேலும் அதிகரிக்க வேளாண் விற்பனை, தோட்டகலைத்துறை இணைந்து, செயல்பட்டு விவசாயிகள் காய்கனிகளை பயிரிடுவதற்கு உரிய ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2022-23ம் ஆண்டில் 50 உழவர் சந்தைகளின் கட்டமைப்பு தரம் உயர்த்தப்படும். உழவர் சந்தைகளில் கணினி, தகவல் தொழி்ல்நுட்ப உபகரணங்கள், மின்னணுவிலைப்பலகை, பொது அறிவிப்பு வசதிகள் போன்றவை ரூ.15 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும்
கோத்தகிரி, வேப்பந்தட்டை,சிதம்பரம், கீழ்பென்னாத்தூர், திருவாரூர் ஆகிய இடங்களில் இருக்கும் உழவர் சந்தையை மக்கள் அதிகம் கூடும்இடங்களுக்கு மாற்றவும், தருமபுரி, நாகப்பட்டிணம், வேலூர், திருப்பத்தூரில் புதிதாக உழவர் சந்தைகள் அமைக்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.
விவசாயிகள் தயாரித்த மதிப்புக்கூட்டுப் பொருட்கள், உயிர் உரங்கள், காய்கறி விதைகள், நாற்றுகள், பழச்செடிகள் ஆகியவற்றை விற்பனை செய்ய தோட்டகலைத்துறைக்கு தேவைக்கு ஏற்ப 50 உழவர் சந்தைகள் ஒதுக்கப்படும்.உழவர் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகள் நலனுக்காக மாதம் இருமுறை விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தி பயிற்சி அளிக்கப்படும்
மாலையிலும் உழவர் சந்தை
தமிழதத்தில் உள்ள உழவர் சந்தைகள் தற்போது காலை நேரத்தில்மட்டுமே செயல்பட்டு வருகின்றன. காய்கறிகள் வாங்க ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவும், மாலை நேரத்திலும் சந்தை செயல்பட வேண்டும் என்று மக்களும், விவசாயிகளும் வைத்த கோரிக்கையைபரிசீலித்து மாலை நேரத்திலும் உழவர் சந்தை செயல்படும். மாவட்டத்துக்கு ஒரு சந்தைவீதம், அங்குசிறு தானியங்கள், பயறுவகைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
மொத்த காய்கறி வணிக வளாகம்
கேரள அரசின் தோட்டக்கலைத்துறையும், வியாபாரிகளும், தமிழகவிவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள், பழங்களைக் கொள்முதல் செய்ய ஏதுவாக தேனி, கோவை, கன்னியாகுமரியில் மொத்த காய்கறி விற்பனை வணிக வளாகம் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் வரும் ஆண்டில் உருவாக்கப்படும்.
விழுப்புரம், திருப்பூருக்கு திட்டம்
விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கவும், விதை உற்பத்தி, ஆர்கானிக் ஃபார்மிங் தொடர்பாக ஆலோசனை பெறவும், விதைசான்று, விதை ஆய்வு, விதை சான்று பெற ஒருங்கிணைந்த வளாகம் திருப்பூர், விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களின் விளை பொருட்களில் நச்சுத்தன்மையை அறிந்து தரத்தை உறுதிப்படுத்த தனியாரிடம் ஆய்வுசெய்து சான்று பெற அதிக கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த கட்டணத்தை அரசே செலுத்தும் வகையில் மானியமாக ரூ.12.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது
இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்