
சென்னை, திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை இடிந்து விழுந்தது. இக்கட்டிடத்தில் இருந்த 24 குடியிருப்புகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்றுக் குடியிருப்புகள் வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். குடியிருப்புகள் இடிந்து விழுந்த பகுதிகளில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளும் மீட்புப் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனிடையே தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீட்பு, நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் பேசிய அமைச்சர், வீடுகளை இழந்தவர்களுக்கு சில நாட்களுக்குள் மாற்றுக் குடியிருப்புகள் வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைத் தற்போது நிவாரண முகாம் மண்டபங்களில் தங்க வைத்துள்ளோம். துறை அதிகாரிகளுடன் சென்று, மாற்று இடத்திற்காக கே.பி.பார்க் உள்ளிட்ட மாற்றுக் குடியிருப்புப் பகுதிகளை நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளோம் என்று தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும் இன்னும் ஓரிரு தினங்களில் மாற்று இடங்கள் வழங்கப்படும். தலா 1 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை இன்று மாலைக்குள் வழங்கப்படும் என்று கூறினார்.
சென்னையில் 40, 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் மக்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத நிலையில் உள்ள வீடுகளை இடித்துவிட்டுப் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற எண்ணம் கடந்த ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று குற்றச்சாட்டிய அவர், சென்னையில் மட்டும் அனைத்துத் தொகுதிகளிலும் வாழ்வதற்கே தகுதியில்லாத 23 ஆயிரம் வீடுகள் இருப்பது கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இது முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, இரண்டு மூன்று ஆண்டுகளில் படிப்படியாக அகற்ற முடிவெடுக்கப்படடும் என்று தெரிவித்தார்.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதற்கட்டமாக இந்த நிதியாண்டில் 7,500 வீடுகள் கட்டித் தருவதற்காக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இன்னும் 3, 4 ஆண்டுகளில் சென்னையில் பாழடைந்த, சிதிலமடைந்த நிலையில் ஒரே ஒரு வீடு கூட இருக்காது எனவும் ஆபத்தான இடங்களில் வசிப்பவர்களுக்குப் புதிய பொலிவோடு புதிய வீடுகளை கட்டி தரப்படும் எனவும் அமைச்சர் பேசினார்.