நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் 2024இல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9, புதுச்சேரியில் 1 என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட திருச்சி, தேனி, ஆரணிக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய 3 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
undefined
மனைவியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்டவருக்கு பாஜகவில் சீட்டு? பரபரக்கும் திருப்பூர் தேர்தல் களம்!
இதையடுத்து, முதற்கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று முன் தினம் இரவு வெளியிட்டது. ஆனால், நெல்லை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்குமான வேட்பாளர் பட்டியல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. அந்த இரு தொகுதிகளை பலரும் கேட்டு வந்ததால் இழுபறி நிலவியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் ப்ரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர். அதேபோல், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கத்பட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள் என்ற நிலையில், மயிலாடுதுறை வேட்பாளர் இன்றிரவுக்குள் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தகவல் தெரிவித்துள்ளார்.