
2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதேபோல திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே இன்று (மார்ச் 25) மாலை நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றுகிறார்.
இந்த பிரச்சாரத்தில் பொதுமக்கள், அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த திமுகவின் மாவட்ட நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர், ஆதரவு இயக்கங்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்கின்றனர். திமுக இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இன்று மாலை 5 மணி முதல் காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
நேற்று மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சு. வெங்கடேசனை ஆதரித்து வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய அவர் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து தமிழக மாணவர்களின் கற்றல் திறனை மத்திய பாஜக அரசு குறைக்க ஆவணம் செய்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இந்த புதிய கல்விக் கொள்கையின் மூலம் ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பில் உள்ள பொதுத்தேர்வுகள், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிலும் கொண்டு வரப்படும் என்றும், இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் மாநில உரிமைகளை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், மத்திய அரசு சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை வளர்க்க மட்டுமே பணம் செலவிட்டு வருவதாகவும், தமிழ் மொழியை வளர்க்க இதுவரை ஒரு ரூபாய் கூட அவர்கள் செலவிடவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் நேரு எனக்கு அப்பா மாதிரி; வேட்புமனு தாக்கலுக்கு பின் துரைவைகோ எமோஷனல்