மனைவியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்டவருக்கு பாஜகவில் சீட்டு கொடுத்திருப்பதாக திருப்பூர் திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, மக்களவைத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டின் 19 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது. பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் பாமகவுக்கும், 3 தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸுக்கும், 2 தொகுதிகள் அமமுகவுக்கும், ஒரு தொகுதி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கும் (ஓபிஎஸ் அணி) ஒதுக்கப்பட்டுள்ளது.
undefined
அந்த வகையில், திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக மாநில பொதுச்செயலாளரான அவர், மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர். கட்சியிலும் செல்வாக்கு மிக்கவர். இந்த நிலையில், மனைவியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்டவருக்கு பாஜகவில் சீட்டு கொடுத்திருப்பதாக திருப்பூர் திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் திமுகவினர் கூறுகையில், “திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.பி. முருகானந்தம் மீது 2015இல் அவரது முதல் மனைவி ஞானசுந்தரியை கொடுமைப்படுத்தி, கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கு ( வழக்கு எண் 527 / 2015) இன்னும் நிலுவையில் உள்ளது. ஞான சுந்தரி phd முடித்துவிட்டு ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியில் இருந்தவர். முருகானந்தத்திற்கும் ஞானசுந்தரிக்கு குழந்தைகள் இல்லை. அதைக் காரணம் காட்டி தினம் தினம் அடித்து கொடுமை செய்துள்ளார்கள் முருகானந்தமும், அவரது பெற்றோர்களும். உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும் மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே முருகானந்தத்திற்கு பிரியா என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளது. இது ஞானசுந்தரிக்கு தெரியவர பிரச்சனை பெரியதாகியுள்ளது. இந்நிலையில் தீடீரென 11-3-2015 அன்று ஞானசுந்தரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முருகானந்தமும் அவரது பெற்றோரும் கூறினர். ஆனால் ஞானசுந்தரியின் தந்தை இதை முற்றிலும் மறுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவ்வழக்கை விசாரித்த அதிகாரிகள் ஞானசுந்தரி மர்மமான முறையில் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு எண் 527 / 2015..” என்றனர்.
‘மொய் வேண்டாம்; மோடிக்கு வாக்களியுங்கள்’: திருமண பத்திரிகை மூலம் நூதன வாக்கு சேகரிப்பு!
சொத்துக்காககவும், மற்றொரு பெண்ணுடன் இருந்த தொடர்பு ஞானசுந்தரிக்கு தெரியவந்ததாலும் முருகானந்தமே அவரது மனைவியை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக வெளியில் நாடகமாடியதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு வழக்கு விசாரணையை தனக்கு பாஜகவில் இருக்கும் செல்வாக்கை வைத்து முடக்கி உள்ளார் எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது பிரியா என்ற பெண்ணுடன் முருகானந்தம் வாழ்ந்து வருகிறார் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இப்பேர்ப்பட்ட ஒரு கொலைக் குற்றம் சாட்டப்பட்ட உத்தமருக்கு தான் பாஜக திருப்பூர் நாடாளுமன்றத்தில் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது. இது எவ்வளவு கேவலமான செயல். இதற்கு திருப்பூர் மக்களே இந்த தேர்தலில் சரியான பதிலடி கொடுப்பர் என அந்த தொகுதி திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயன், பாஜக வேட்பாளராக, ஏ.பி.முருகானந்தம், அதிமுக வேட்பாளாரக அருணாச்சலம் அகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.