சிறுவன் உள்பட மூவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பதாக மிரட்டல்... ஆடிப்போன கிராம நிர்வாக அலுவலர்கள்...

First Published May 26, 2018, 7:33 AM IST
Highlights
Three people including a boy threatening to burn themselves


கடலூர்
 
கடலூரில் வீட்டு மனைப்பட்டா கேட்டு சிறுவன் உள்பட மூவர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சிறுபாக்கம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மகிமைதாஸ் (55). இவர் அங்குள்ள காலி இடத்தில் குடிசைபோட்டு கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார். 

இந்த நிலையில் தான் குடிசை அமைத்திருக்கும் இடத்துக்கு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு ஆட்சியர், கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வந்தார். ஆனால், இதுவரையில் அவருக்கு பட்டா வழங்கப்படவில்லை.

இந்நிலையில், மகிமைதாஸ் நேற்று, தனது மனைவி வனசுராணி (50), பேரன் ஆனந்தநாயகன்(15) ஆகியோருடன் சிறுபாக்கத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மனைப்பட்டா வழங்க கோரி முழக்கம் எழுப்பிய அவர்கள், கையில் ஒரு கேனில் எடுத்துவந்த பெட்ரோலை உடலில் ஊற்றி மூவரும் தீக்குளிக்கப் போவதாக மிரட்டினர். 

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த சிறுபாக்கம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அலெக்ஸ்சாண்டர், தனிப்பிரிவு ஏட்டு மணிவண்ணன் மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து அவரை தடுத்து நிறுத்தி, பெட்ரோல் கேனை பிடுங்கினர்.

அதனைத் தொடர்ந்து, "மனைப்பட்டா பெற்று தர சம்பந்தப்பட்ட அதிகரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்" என்று காவலாளர்கள் தெரிவித்தனர். 

இதனையேற்று மகிமைதாஸ் தனது மனைவி மற்றும் பேரனுடன் அங்கிருந்து கிளம்பினார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


 

click me!