அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களில் கனஜோரா மழை பெய்யுமாம் ! வானிலை ஆய்வு மையம்தான் சொல்லுது !!

By Selvanayagam PFirst Published Aug 17, 2019, 6:40 PM IST
Highlights

வங்கக் கடல் பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் இந்த  10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் நீலகிரி மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

நேற்று இரவு சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. இதே சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழகப் பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு இருப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்..

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழையோ மிக கன மழையோ பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. கடலூர் 13 செ.மீ, அரியலூர் 12 செ.மீ., திருவாரூர் 11 செ.மீ, விழுப்புரம் 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

click me!